ஈவு, இரக்கமில்லா காட்டுத்தீ.! கருகும் உயிரினங்கள்.. "Pray for Australia"
ஆஸ்திரேலியாவில் 3 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து பற்றி எரியும் காட்டு தீ, சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீ ஓய வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்ற கோரிக்கையுடன் "Pray for Australia" என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது.
கபளீகரம் செய்யும் காட்டுத்தீ:
ஆஸ்திரேலிய மாகாணங்களான நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் கடந்த செப்டம்பர் மாதம் ஏற்பட்ட காட்டுத்தீ இன்னும் கட்டுப்படுத்தப்படவில்லை. தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயில் இருந்தது தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடமைகளை துறந்து வேறு வேறு பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இதுவரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதுவரை சுமார் 60,000 சதுர கி.மீ அளவிலான வனங்கள் மற்றும் பூங்காக்களை காட்டு தீ கபளீகரம் செய்துள்ளது.
கருகும் உயிர்கள்:
3 மாதங்களுக்கு மேலாக தொடர்ந்து எரியும் காட்டுத்தீயில் சிக்கிப் பல லட்சக்கணக்கான உயிரினங்கள் , ஆஸ்திரேலிய நாட்டில் மட்டுமே உள்ள பல தனித்துவமான காட்டு விலங்குகள் கருகி மடிந்துள்ளன. காட்டு தீயின் கோரப்பசிக்கு மனிதர்களும் தப்பவில்லை. இதுவரை சுமார் 24 பேர் வரை தீயில் கருகி பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.
எகிறும் வெப்பம், பாதிக்கும் சுற்றுசூழல்:
பற்றி எரியும் காட்டுத்தீ காரணமாக தென் கிழக்கு ஆஸ்திரேலியா பகுதிகளில் வெப்ப நிலை 104 டிகிரியை கடந்துள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் எரிந்து வரும் காட்டுத் தீயால் அப்பகுதி வானம் முழுவதும் அடர் சிவப்பு நிறமாக காட்சியளிக்கிறது. சுற்றுப்புற சூழல் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் வரவைக்கும் காட்சிகள்:
கொடும் காட்டு தீயில் சிக்கி பலியாகிவிடாமல் தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கங்காரு, கோலா கரடிகள் உள்ளிட்ட பல விலங்குகளின் போட்டோ மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்பவரின் கண்களில் கண்ணீர் பெருக வைக்கிறது. காட்டு தீயின் தணலில் சிக்கி தவித்து வெளியேற இயலாமல், தீ-க்கு உணவாகியுள்ளன பல லட்சக்கணக்கான உயிரினங்கள்.
காட்டுத்தீயால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி Batlow . இங்கிருக்கும் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒருவரின் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகள் காண்போரின் மனதை உருக்கும் வகையில் உள்ளது. அந்த வீடியோவில் அடர்ந்த புகைமூட்டத்துடன் கூடிய வானம், கீழே தரையிலோ நூற்றுக்கணக்கான கருகிய உடல்கள். கங்காரு, கோலா கரடி, செம்மறி ஆடுகள் காட்டு தீயிலிருந்து தப்பிக்க முயன்று சாலை வரை வந்து உயிரிழந்துள்ளன.
திணறும் அரசு:
தொடர்ந்து வறண்ட காணப்படும் வானிலை மற்றும் அதிகரிக்கும் காற்றின் வேகம் உள்ளிட்ட முக்கிய காரணிகளால்
மளமளவென பற்றி கொண்டே செல்லும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது ஆஸ்திரேலிய அரசு.
தொற்று நோய் அபாயம்:
காட்டு தீயில் கருகியும், தீ காரணமாக ஏற்பட்டுள்ள கடும் புகை மூட்டத்தால் மூச்சுத் திணறியும், நீர் கிடைக்காமலும் சாலையோரங்களில் ஆயிரக்கணக்கான கங்காருகளும், காட்டு நாய்கள் , மான்கள், செம்மறி ஆடுகள் உள்ளிட்ட பல பலியாகி கிடக்கின்றன. உயிரிழந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த ஆட்கள் இல்லாததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Pray for Australia:
காட்டு தீ கோரத்தாண்டவமாடும் நிலையில் உலக மக்கள் மற்றும் வன விலங்கு ஆர்வலர்கள் என அனைவரின் கவனமும் ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியுள்ளது. அதுவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் மக்களை வெகுவாக பாதித்துள்ளன. சுமார் அரை பில்லியன் விலங்குகள் கருகி உயிரிழந்துள்ள நிலையில் ட்விட்டரில் #prayforaustralia என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.
காட்டுத்தீயில் சிக்கி மனிதர்கள், விலங்குகள் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் பலியாகி வரும் நிலையில் நாமும் ஆஸ்திரேலியாவிற்காகவும், காட்டு தீ கட்டுக்குள் வர வேண்டும் என்றும் பிரார்த்திப்போம்.
Comments